வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி


வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி
x

வேலூரில் கோரத்தாண்டவம் ஆடும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

வேலூர்

மக்கள் தவிப்பு

வேலூர் என்றாலே வெயிலூர் என்று மக்கள் கூறும் அளவுக்கு கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மார்ச் மாத தொடக்கத்தில் 100 டிகிரியை தொட்டது. எனினும் மாவட்டத்தில் அவ்வப்போது சில நாட்கள் தொடர்ந்து மழையும் பெய்தது. சுட்டெரிக்கும் வெயிலை மழையால் தணிக்க முடியவில்லை.

பகலில் வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். முகத்தில், தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வீடுகளுக்குள்ளே இருக்கும்போது கூட புழுக்கத்தால் மக்கள் தவித்தனர்.

ஆங்காங்கே கரும்புச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், குளிர்பான கடைகள் முளைத்துள்ளன. அந்த கடைகளை மக்கள் தேடிச்சென்று தாகத்தை தணித்து வருகின்றனர்.

வெயில் அளவு

கடந்த 14-ந்தேதி 106.7 டிகிரியாகவும், 15-ந் தேதி 108.1 டிகிரியாகவும், 16-ந் தேதி 108 டிகிரியாகவும் பதிவாகி இருந்தது. வேலூரில் நேற்றும் வெயில் கோரத்தாண்டவம் ஆடியது. மதியவேளையில் நகர சாலையில் குறைந்த அளவு வாகனங்களே சென்றது. போக்குவரத்து சிக்னல்களில் சில நிமிடங்களில் கூட வாகன ஓட்டிகளால் நிற்க முடியாமல் தவித்தனர். நேற்று வேலூரில் 106.9 டிகிரி பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது.


Next Story