ஆதார் அட்டைக்காக அலைக்கழிக்கப்படும் மக்கள்
கள்ளக்குறிச்சி தாலுகாவில் ஆதார் அட்டைக்காக மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஆதார் அட்டை என்பது அனைத்து பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அரசின் பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும், வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் ஆதார் அட்டை அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் உள்ள ஒரு நபர் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு அரசு சார்ந்த உதவிகளும் பெற முடியாது என்பதும், ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியனின் தனிப்பட்ட அடையாள சான்று.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டைக்காக கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பதிவேற்றம் செய்யப்படவில்லை
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆதார் சேவை மையங்களில் கள்ளக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் புதிய ஆதார் அட்டை பதிவு செய்தல், புகைப்படம் மற்றும் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் மாற்றம் மற்றும் கருவிழி, கைவிரல் ரேகை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக கணினியில் பொதுமக்களின் தகவல்களை உள்ளீடு செய்யும்போது இணையதளத்தில் விழுப்புரம் மாவட்டம் என உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம் என இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை எனவும், மேலும் இணையத்தில் கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கான பின்கோடு எண்களும் இணைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பொதுமக்கள் பரிதவிப்பு
இதனால் பொது சேவை மையங்களில் தற்போது பெயர், பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண் ஆகியவை மட்டுமே மாற்றம் செய்ய முடிகிறது. ஆனால் 5 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதியதாக ஆதார் அட்டை மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், திருமணம் ஆன பெண்கள் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை உள்ளது.
இதனால் கர்ப்பிணிகள், தாய்மார்கள் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியவில்லை. ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய வருபவர்கள் தாலுகா அலுவலகங்கள், பொது சேவை மையங்கள், நகராட்சி அலுவலகம், தபால் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று அலைந்து திரிந்தும் முகவரி மாற்றம் செய்ய முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.
நடவடிக்கை
இதனிடையே கள்ளக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு மட்டும் ஆதார் கார்டு சம்பந்தமான அனைத்து சேவைகளும் கிடைப்பதாக கூறப்படுகிறது.
எனவே கள்ளக்குறிச்சி தாலுகா மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இணையத்தில் ஆதார் அட்டை பெற மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவதி
இது குறித்து கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கலியமூர்த்தி கூறுகையில்,
மாணவர்களை பள்ளியில் சேர்க்க புதிய ஆதார் அட்டை தேவைப்படுகிறது. அதற்காக ஆதார் சேவை மையங்களுக்கு சென்றாலும் கடந்த ஒரு வருடமாக புதிய ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை. இதனால் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் சிரமமாக உள்ளது. மேலும் திருமணம் ஆன பெண்கள் ஆதார் அட்டையில் கணவரின் முகவரியை மாற்றம் செய்தால் மட்டுமே குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் குடும்ப அட்டை பெற முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார்.
முகவரி மாற்றம் செய்யமுடியவில்லை
தியாகதுருகம் அருகே மடம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா கூறுகையில்,
சின்னசேலம் அருகே அக்கராயப்பாளையம் கிராமம் எனது சொந்த ஊர். எனக்கும் தியாகதுருகம் அருகே மடம் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். இந்நிலையில் கர்ப்பிணிக்கான உதவித்தொகை பெறுவதற்காக வங்கியில் சேமிப்பு கணக்கு எண் தேவைப்படுகிறது. சேமிப்பு கணக்கு தொடங்க வங்கிக்கு சென்ற போது தற்போது உள்ள முகவரியில் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் ஆதார் சேவை மையத்திற்கு சென்ற போது கடந்த ஒரு வருடமாக முகவரி மாற்றம் செய்ய முடியவில்லை என கூறுகின்றனர். இதனால் கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாமல் உள்ளது. எனவே இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.