மயிலாடுதுறை-திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கப்படுமா?- பொதுமக்கள்


மயிலாடுதுறை-திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கப்படுமா?-  பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:45 AM IST (Updated: 20 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை- திருவாரூர் வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

மயிலாடுதுறை- திருவாரூர் வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை- காரைக்குடி ரெயில்வே வழித்தடம்

மயிலாடுதுறை- காரைக்குடி ரெயில்வே வழித்தடம் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட 2-வது மீட்டர்கேஜ் பாதையாகும். இந்த வழித்தடம் மத்திய அரசால் 1,500 கோடி ரூபாய் செலவில் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.

இந்த வழித்தடம் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற பகுதிகளை தென் மாவட்ட பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான வழித்தடமாகும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் புலம்பெயர்ந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

வளமான வழித்தடம்

மிளகாய், வெங்காயம், பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக கன்னியாகுமரி தொடங்கி மயிலாடுதுறை வரை பல்வேறு இடங்களில் வியாபாரிகள் தங்கி உள்ளனர். இவர்கள் வியாபாரத்துக்காகவும், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வரவும் மயிலாடுதுறை-காரைக்குடி இடையேயான ரெயில்வே வழித்தடம் முக்கியத்துவம் பெறுகிறது.

மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் தொடர்ந்து பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்கினால் தென்னக ரெயில்வேக்கு அதிகமான வருவாயை ஈட்டித்தரக்கூடிய வளமான வழித்தடமாக அமையும்.

மதுரைக்கு ரெயில்

இந்த வழித்தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக மதுரைக்கு புதிதாக ரெயில் இயக்க வேண்டும் என இந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் மற்றும் சங்கத்தினர் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

நெற்களஞ்சியம்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாகும். இங்கு விளையும் நெல்லை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருட்களை மயிலாடுதுறையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்ல ரெயில் வசதி இல்லை. அதேபோல் மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணம் மேற்கொள்வதற்கும் ரெயில் வசதி இல்லை.

பொதுவாகவே டெல்டா மாவட்டங்களுடன் தென் மாவட்டங்களையும், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களையும் இணைக்கும் ரெயில்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டி உள்ளது.

அறிவிப்பு

ரெயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டி தரக்கூடிய வழித்தடமாக உள்ளதால் தென்னக ரெயில்வே மயிலாடுதுறை- காரைக்குடி வழித்தடத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story