திருச்செந்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்
திருச்செந்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் முறையாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி 18, 19 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதுகுறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது
காலிகுடங்களுடன் சாலைமறியல்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாலையில் தெற்குரதவீதி, மேலரதவீதி சந்திப்பில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கையில் காலிக்குடங்களுடன் பெண்களும், ஆண்களும் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் எனவும், நகராட்சி ஆணையர் நேரில் வந்து முறையான பதில் கூற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் நகராட்சி ஆணையர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து நடந்து சென்று இரும்பு ஆர்ச் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தகவலறிந்து வந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், கனகாபாய், நகராட்சி ஆணையர் வேலவன், மண்டல துணை தாசில்தார் பொன்மாரி, கிராமநிர்வாக அலுவலர் செல்வலிங்கம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்று குடிநீர் வினியோகம்
இதில், அப்பகுதிக்கு உடனடியாக நாளை (அதாவது இன்று சனிக்கிழமை) காலைக்குள் குடிநீர் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், இனி வரும் காலங்களில் மாதம் 3 அல்லது 4 முறை முறையாக குழாயில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என ஆணையர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். திருச்செந்தூரில் பொதுமக்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.