கோவில்களில் பொருட்களை திருடியதாக கும்பலுக்கு பொதுமக்கள் தர்ம அடி
புதுக்கோட்டை அருகே கோவில்களில் பொருட்களை திருடியதாக கும்பலை விரட்டி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர்.
கோவில்களில் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளனூர், ஆள்வாயம்பட்டி பகுதி கிராமங்களில் சாலையோரம் கோவில்களில் சிறு, சிறு பொருட்களை திருடிக்கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பிச்செல்வதாக நேற்று மாலை அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர். இதற்கிடையில் புதுக்கோட்டை அருகே மச்சுவாடியில் ஆட்டோவை மறித்து அதில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 6 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் ஆட்டோவையும் அடித்து நொறுக்கினர்.
6 பேர் படுகாயம்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்றனர். மேலும் படுகாயத்துடன் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் படுகாயமடைந்தவர்களில் 10 வயது, 8 வயது சிறுமிகள், 19 வயதுடைய 2 வாலிபர்கள், 38 வயதுடைய பெண், 48 வயதுடைய ஆண் ஒருவரும் ஆவர். இவர்களில் ஆண், பெண் இருவரும் கணவன், மனைவி என்பதும், மற்றவர்கள் அவர்களது குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது. இதில் பெண்ணின் ஊர் பெரம்பலூர் எனவும், கணவரின் ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சிறுமி கவலைக்கிடம்
இந்த கும்பல் கோவில்களில் திருடியது உண்மையா? எனவும், எந்த கோவில்களில் திருடினார்கள் எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் காயமடைந்தவர்களில் 10 வயது சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.