கப்பலூர் சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகை


கப்பலூர் சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகை
x

திருமங்கலம் அருகே கப்பலூர் இணைப்பு சாலைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் ஆக்கிரமித்ததாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் இணைப்பு சாலைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் ஆக்கிரமித்ததாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சுங்கச்சாவடி

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி சர்ச்சைக்குரிய வகையில் தினமும் பிரச்சினை நடைபெற்று வருகிறது. மேலும் திருமங்கலம் நகர் பகுதி அருகில் இருப்பதால் திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கும், கப்பலூர் வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் பலமுறை சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவ்வப்போது கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் திருமங்கலம் நகரில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் சுங்கச்சாவடி நிர்வாகம் இறங்குவதால், தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.

நடவடிக்கை இல்லை

இந்தநிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் வாகனத்திற்கு கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பின்னர் சுங்கச்சாவடி நிர்வாகம் சமாதானமாகி கட்டண வசூலிக்காமல் வாகனத்தை அனுப்பி வைத்தது. தற்போது மேலும் ஒரு பிரச்சினை உருவாகி உள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் இணைப்பு சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு செய்துள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

முற்றுகை

இதற்கிடையில் நேற்று திருமங்கலம் மற்றும் கப்பலூர் பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இணைப்பு சாலையை அகற்றக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விைரந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் நேரில் வந்து கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது. அங்கு ஒரு போலீசாரை நிறுத்தி பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story