செல்போன் திருட்டை விசாரிக்க வந்த நெல்லை போலீசாரை பொதுமக்கள் முற்றுகை
மருத்துவக்கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு போனது குறித்து விசாரிக்க வந்த நெல்லை மாவட்ட போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்த வாலிபர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் திருட்டு
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் புனித் ஜாங்கிர். இவர் நெல்ைலயில் உள்ள பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இவருடைய விலை உயர்ந்த செல்போன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருட்டு போனதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் செல்போனின் பயன்பாடு திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன் மற்றும் போலீஸ் குழுவினர் 5 பேர் உமராபாத் பகுதிக்கு வந்து செல்போன் வைத்திருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலூர் மாவட்டம் மேல்பட்டி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (வயது 23) என்பவரிடம் விலைக்கு வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் முற்றுகை
அதன்பேரில் நேற்று காலை 11.30 மணியளவில் போலீசார் விரைந்து சென்று செல்போன் திருட்டு சம்மந்தமாக லோகேசை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேசுக்கு ஆதரவாக சங்கராபுரம் கிராம மக்கள் திரண்டு போலீசாரை முற்றுகையிட்டனர். மேலும் செல்போனை லோகேஷ் திருடவில்லை. அவரிடம் விசாரிக்கக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் போலீசாரின் பிடியிலிருந்த லோகேஷ் நைசாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மேல்பட்டி போலீசார் உதவியுடன் திருநெல்வேலி போலீசார், தப்பியோடி தலைமறைவான லோகேஷை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது