ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி 8-வது வார்டில் மேற்கு ஆயக்குடி, குறிஞ்சிநகர், ஆர்.எம்.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 8-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, ஆயக்குடி போலீசார், பேரூராட்சி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டம் காரணமாக ஆயக்குடி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.