அமைச்சர் காரை பொதுமக்கள் முற்றுகை
அமைச்சர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தனக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வரகுபாடி, காரை, தெரணி, சிறுகன்பூர், தெற்குமாதவி, சாத்தனூர் மற்றும் சாத்தனூர் குடிகாடு ஆகிய கிராமங்களில் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது தெற்குமாதவி கிராமத்திற்கு அமைச்சர் நன்றி சொல்ல வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், கிராம எல்லையில் மருதையாற்றின் பாலம் அருகே அமைச்சரின் காரை மறித்து முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் சிவசங்கரிடம், பெண்கள் தங்கள் கிராமத்தின் வழியே செல்லும் மருதையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாகவும், கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல், சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலப்பரப்பினை வீண் செய்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் இந்த கிராமத்தின் வழியே காவிரி கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், தங்களுக்கு குடிநீர் வழங்காததால் குட்டை நீரை குடிக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தெருக்களில் சாக்கடை நீர் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவரது காருக்கு பெண்கள் வழிவிட்டனர். இதையடுத்து அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.