மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அடிக்கடி மின்வெட்டால் மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறு தொழில் செய்யும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைபட்டில் இருந்து மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு மின்சாரம் வினியோகிப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மூங்கில்துறைப்பட்டு பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே 2 முறை மூங்கில்துறைப்பட்டு இளம்மின் பொறியாளர் அலுவலகத்தில் போராட்டமும் நடத்தியுள்ளனர். இருப்பினும் சீரான மின்சாரம் வினியோகம் செய்யவில்லை. இந்த நிலையில் இன்றும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 3-வது முறையாக மூங்கில்துறைப்பட்டு இளம்மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.