கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குப்பை கிடங்கு
திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால், மலை சுற்றும் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களான அடிஅண்ணாமலை, ஆடையூர் ஆகிய கிராமங்களில் குப்பை கொட்ட இடம் இல்லாமல் உள்ளது. இங்கு குப்பை கிடங்கு அமைத்திட தேவனந்தல் ஊராட்சியில் புனல் காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய பகுதியில்கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள புனல்காடு, கலர்கொட்டாய் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் பொக்லைன் எந்திரம் சிறைப்பிடிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து குப்பை கிடங்கு அமைக்கும் பணி பல மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் இந்த இடத்திற்கு வந்து குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது.
ஊராட்சி அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் நேற்று புனல்காடு அருகில் உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த குப்பை கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனால் நிலத்தடி நீர் மாசு அடையும் என்றும் திடீரென ஆடையூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி முனுசாமி மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். பின்னர் அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.