பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:45 PM GMT)

கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரத்தில் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து கணக்கநாடார்பட்டி, பலவேசநாடார்பட்டி, கீழலட்சுமிபட்டி, அய்யனார்புரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தாமிரபரணி குடிநீர் மற்றும் குத்தாலபேரி குளத்தில் உள்ள தண்ணீர் 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. தற்போது அந்த பகுதியில் ஒருங்கிணைந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டி அதிலிருந்து அனைத்து தொட்டிகளுக்கும் தண்ணீர் பிரித்து வழங்குவதற்காக பணிகள் நடைபெற உள்ளதாக இருந்தது.

இதை அறிந்த கணக்கநாடார்பட்டி, பலவேசநாடார்பட்டி, கீழலட்சுமிபட்டி, அய்யனார்புரம், ராமேஸ்வரம் பகுதி பொதுமக்கள் அவ்வாறு அனைத்து மேல்நிலை தொட்டிகளுக்கும் தண்ணீர் பிரித்து வழங்குவதாக இருந்தால் தற்போது கிடைக்கும் தண்ணீர் கூட கிடைக்காது என்றும், ஏற்கனவே உள்ள இந்த குடிநீர் தொட்டியில் இருந்து 2 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி தொடர்பாக யூனியன் ஆணையாளர் முன்னிலையில் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story