எர்ணாவூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
எர்ணாவூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எண்ணூர்,
கோடை வெயில் வாட்டிவரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எர்ணாவூர் காமராஜ் நகர், பிருந்தாவன் நகர், கன்னிலால் லேஅவுட், காந்திநகர், எர்ணீஸ்வரர் நகர், பஜனை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று காலை, சீரான குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் எர்ணாவூர் முருகன் கோவில் சாலை அருகில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் எண்ணூர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.