குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
வளையாம்பட்டு, நெடுங்குணம் கிராமங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி சிரமப்பட்டனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் உள்ள கொள்ளைமேட்டு தெருவில் 20 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.