குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டில் உள்ள ராமன்தெரு, விருத்தாம்பிகை தெரு, சேலம் ரோடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 27 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுபற்றி அந்த பகுதியினர் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், தீர்வு காண்பதற்கு அவர்கள் முன்வரவில்லை. நேற்றும் இவர்களுக்கான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க.வை சோந்த கட்சியினர் விருத்தாசலம் நீதிமன்றம் அருகே சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போச்சுவார்த்தை
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், மேலும் குரங்குகள் தொல்லையும் அதிகமாக உள்ளது, இதை கட்டுப்படுத்த கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்களது கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கலைந்து செல்வோம் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கைளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.