குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
சேலம்

மேச்சேரி:-

ஜலகண்டாபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். காலிக்குடங்களுடன் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் வினியோகம்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் ஊராட்சி கட்டி நாயக்கன்பட்டி பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கட்டி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜலகண்டாபுரம்- எடப்பாடி சாலையில் கட்டிநாயக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை 8.45 மணி அளவில் ஆண்களும், பெண்களும் திரண்டனர். அவர்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், வாசுதேவபிரபு, ஆவடத்தூர் ஊராட்சி தலைவர் சத்யாசெல்வம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story