சேரம்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சேரம்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பந்தலூர்
சேரம்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே பாலவாடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த பல நாட்களாக சேரங்கோடு ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பெண்கள் காலிக்குடங்களுடன் அலைந்து திரியும் நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைல. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேரம்பாடி பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதனால் பந்தலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் பெண்கள், குழந்தைகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர். அப்போது போலீசார், ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.