அய்யன்கொல்லி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
அய்யன்கொல்லி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பந்தலூர்
அய்யன்கொல்லி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வசதி இல்லை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லியில் அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 70 தொகுப்பு வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 70 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த குடியிருப்புக்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் குடிக்க குடிநீர் வசதியும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சாலை மறியல்
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் காரக்கொல்லியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி போலீசார் மற்றும் சேரங்கோடு ஊராட்சி அதிகாரிகள் அங்கு சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்ததை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்ைத கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.