விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த தொரவலூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 39 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, இந்த 39 குடும்பங்களையும் காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை சார்பில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று வீட்டு வரி, மின் கட்டணம் கட்டி குடியிருந்து வருகிறோம். திடீரென எங்களை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே செல்வது என்றும், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரியும் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வீடுகளில் கருப்பு கொடி கட்டிய பொதுமக்கள்
இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடியை கட்டினர். இருப்பினும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். மேலும் மின்வாரியத்துறையினர் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட மின்இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தொரவலூர் கிராமத்திற்குள் செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன், துணை தலைவர் தென்றல் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்றனர். இதையடுத்து இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.