குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்காததை கண்டித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக்கோரியும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்காததை கண்டித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக்கோரியும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேதமடைந்த குடிநீர் தொட்டி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் பள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ளது தென் புதுப்பட்டு கிராமம். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி முற்றிலும் சேதம் அடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக்கோரி அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் மூலமும், நேரடியாகவும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மேல்நிலை நீரத்தேக்க தொட்டில் இருந்து சிமெண்டு புச்சு இடிந்து விழுந்தது. இதில் ஒரு வீடு சேதம் அடைந்தது.

சாலை மறியல்

மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய்கள் பதிக்காமல் பழைய குழாய்களிலேயே இணைப்பு கொடுத்ததால் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வருவது நின்று விட்டது. இது சம்பந்தமாக ஒப்பந்ததாரரிடம் ஊர் பொதுமக்கள் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தனியாக குடிநீர் பைப் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஒப்பந்ததாரரும் அதற்கு செவி சாய்க்கததால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தென்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென ஆசனாம்பட்டு சாலையில் நேற்று காலை காலை 9 மணிக்கு காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.‌ அதற்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரவேண்டும், ஜல்-ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட நாள் முதல் எங்களுக்கு குழாயில் தண்ணீர் வரவில்லை. பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வேண்டும். அதுவரை நாங்கள் மறியலில் ஈடுபடுவோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

உடனே போலீசார், வட்டார வளர்ச்சி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது முறையாக குடிநீர் வினியோகிப்பதாகவும், ஒரு சில நாட்களில் சேதம் அடைந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை அகற்றி விடுவதாகவும் கூறினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story