குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
எடப்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
எடப்பாடி:
எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சி வேட்டுவப்பட்டி கிராம பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. இதனை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அந்த மக்கள் நேற்று எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது குடியிருப்புகளை மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.