ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னமனூர் அருகே எரக்கோட்டைப்பட்டி பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அரசு சார்பில், அந்த பகுதி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ஓடைப்பட்டி போலீசார், உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் நேற்று வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் எரக்கோட்டை பகுதியில் தேனி-சின்னமனூர் மாநில நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது நாங்கள் சுமார் 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். திடீரென்று உங்கள் வீடு அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று அகற்ற அரசு ஏற்பாடு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் வீடுகளை இடித்தால் நாங்கள் சாலையில் தான் வாழ வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.