குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

மீன்சுருட்டி:

மறியல்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குண்டவெளி ஊராட்சியை சேர்ந்த வெண்ணங்குழி கிராமத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கான மோட்டார் பழுதுடைந்ததால், கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நேற்று காலை சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் போக்குவரத்து தடைபட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நீர்மூழ்கி மோட்டாைர சரி செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story