நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள்


நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுக்க நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்தனர்.

நாகப்பட்டினம்

குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுக்க நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்தனர்.

காலிக்குடங்களுடன் வந்தனர்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

அதன்படி கீழ்வேளூர் தாலுகா வண்டலூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு

கீழ்வேளூர் தாலுகா வண்டலூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சில வீடுகளில் மோட்டாரை வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் முறையாக செல்வது கிடையாது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வண்டலூர் கிராமத்துக்கு அடிப்படை தேவையான குடிநீரை முறையாக வழங்க வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கவே காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தோம் என்று தெரிவித்தனர். காலி குடங்களுடன் பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் திறக்க வேண்டும்

அதேபோல திருக்குவளை அருகே வடுகூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள்கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருக்குவளை தாலுகா வடுகூர் பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடிக்காக விதைகளை தெளித்துள்ளோம். தங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்கள் அரிச்சந்திரா கிளை நதியில் இருந்து பழையனாறு கிளை வாய்க்கால், கோரை வாய்க்கால், ஆட்டுத்தாடையான் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது தற்போது வரை எங்கள் பகுதிக்கு வரவில்லை. இதனால் வயலில் தெளித்த விதைகள் முளைக்காமல் கருகி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆலங்குடி சட்ரசில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story