பொதுமக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளலாம்
நமக்கு நாமே திட்டத்தில் ஊரக பகுதிகளில் பொதுமக்கள் அரசின் நிதியுதவியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நமக்கு நாமே திட்டம்
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 2021-22-ம் ஆண்டு முதல் நமக்கு நாமே திட்டம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தில் தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் 3-ல் ஒரு பங்கு பொதுமக்கள் பங்களிப்பை அளித்து நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்கலாம். இதில் ஒரு பங்கு நிதி உள்ளூர் மக்கள் அளித்தால் 2 பங்கு நிதி அரசின் சார்பில் வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2021-22-ம் நிதியாண்டில் சிறுபாலங்கள், சிமெண்டு கான்கிரீட் சாலைகள் உள்பட 40 திட்டப்பணிகள் ரூ.2 கோடியே 95 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில் ரூ.2 கோடியே 14 லட்சம் அரசின் நிதிபங்களிப்பாகவும், ரூ.81 லட்சம் தனிநபர் மற்றும் உள்ளூர் மக்கள் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் நிதியுதவியுடன்...
இந்த நிதியாண்டில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நமக்கு நாமே திட்டத்தில் 115 கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள், 10 கழிவுநீர் இணைப்பு பணிகள், 7 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள், ரேஷன் கடை அமைக்கும் பணிகள் உள்பட 147 திட்டப்பணிகள் ரூ.10 கோடியே 35 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள அரசின் அனுமதி பெறப்பட்டு பல்வேறு பணிகள் செயலாக்கத்தில் உள்ளன.
இதில் ரூ.8 கோடியே 7 லட்சம் அரசின் நிதி பங்களிப்பாகவும், ரூ.2 கோடியே 28 லட்சம் தனிநபர், உள்ளூர் மக்களின் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிகநிறுவனங்கள், உள்ளூர் மக்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத்திட்ட பணிகளை தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.