லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர்

போடிப்பட்டி,

மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் மாசு ஏற்படுத்துவதாகக்கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்கள்

மடத்துக்குளத்தையடுத்த துங்காவி சுற்றுவட்டார பகுதிகளில் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது.

அவற்றிலிருந்து கற்கள் மற்றும் ஜல்லிகளை கொண்டு செல்வதற்கு அதிக எண்ணிக்கையில் லாரிகள் இயக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று துங்காவி-வேடப்பட்டி சாலையில் மலையாண்டிபட்டினம் பிரிவுக்கு அருகில் கல் மற்றும் ஜல்லிகளை ஏற்றிச்செல்லும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் தாசில்தாரின் சமாதானப் பேச்சுவார்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

புழுதி மண்டலம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த கிரஷரில் கற்களை அரைக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதால் நீண்ட தூரம் வரை புழுதி மண்டலம் ஏற்படுகிறது.இதனால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கு பலவிதமான சுவாசப் பிரச்சினைகள், தோல் நோய்கள் போன்றவை ஏற்படுகிறது.

மேலும் தென்னை, வாழை, மல்பெரி போன்ற பயிர்களில் புழுதி படிவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இதுதவிர இரவு பகலாக லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பாதுகாப்பற்ற நிலை உள்ளது.மேலும் அதிக எடையுள்ள வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் சாலைகள் சேதமடைகிறது.

எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story