தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை
ஓமலூர்:-
தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று ஓமலூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசினார்.
ஆர்ப்பாட்டம்
ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், சாராயம் மற்றும் மது வகைகளால் ஏற்படும் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. வரவேற்றார். நாடாளுமன்ற மேலவை எம்.பி. சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன் (சங்ககிரி), ராஜமுத்து (வீரபாண்டி), ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி), சித்ரா (ஏற்காடு), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. பேச்சாளர் கோபி காளிதாஸ் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசியதாவது:-
வாழ முடியவில்லை
தமிழகத்தில் சாராயம் குடித்து 25 பேர் இறந்துள்ளனர். ஆனால் அவர்கள் விஷச்சாராயம் குடித்து இறந்ததாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சாராயம் ஆறாக ஓடுகிறது என்றார். தற்போது அது நிரூபணமாகி உள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்போது வரும் என்று மக்கள் எண்ணுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் நேற்று வரை 5 ஆயிரம் மதுபான பார்கள், சந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் கஞ்சா, சந்துக்கடைகள் உள்ளன. இதனால் தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
வெற்றி
வருகிற நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி சொல்பவர் தான் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், மணிமுத்து, ஏ.வி.ராஜூ, மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் வாசுதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓமலூர் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.