கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படுமா?


கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படுமா?
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கலெக்டர் அலுவலகம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்வது வழக்கம்.

குறிப்பாக திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுதால் அன்றைய தினம் நூற்றுக்கணக்கானோர் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் வருகிறார்கள்.

இதுமட்டுமின்றி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் என பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டங்களும் அடிக்கடி நடத்தப்படுகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

இந்த சூழ்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

தரை தளம் மட்டுமின்றி 3 அடுக்கு மாடிகள் கொண்ட கலெக்டர் அலுவலகத்தில் மாடி தளங்களில் ஒரு சில இடங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டது. அதுவும் சரிவர செயல்படவில்லை என மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

எனவே கலெக்டர் அலுவலக முகப்பு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story