குளத்தின் படித்துறையில் உடைத்து வீசப்படும் மதுபாட்டில்கள்


குளத்தின் படித்துறையில் உடைத்து வீசப்படும் மதுபாட்டில்கள்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:45 AM IST (Updated: 21 Oct 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே குளத்தின் படித்துறையில் மதுபாட்டில்கள் உடைத்து வீசப்படுவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே குளத்தின் படித்துறையில் மதுபாட்டில்கள் உடைத்து வீசப்படுவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஆண்டியப்ப அய்யனார் கோவில்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் புனவாசல் பகுதியில் ஆண்டியப்ப அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலையொட்டி அய்யனார் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோரத்தில் அப்பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் படித்துறை கட்டப்பட்டது.

இந்த படித்துறையை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி வடபாதிமங்கலம், புனவாசல், வடகட்டளை, ஓகைப்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாட்டில்களை உடைத்து வீச்சு

பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் இந்த படித்துறையை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். சமூக விரோதிகள் இரவு நேரங்களில் இந்த படித்துறையில் அமர்ந்து மது அருந்திவிட்டு, பின்னர் மது பாட்டில்களை அங்கேயே சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோவிலுக்கு வருபவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் படித்துறையில் இறங்கி குளிக்க செல்லும் போது உடைந்த பாட்டில்கள் கால்களில் குத்தி காயம் அடைகின்றனர். மேலும் இந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்களும் நடப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். படித்துறையில் மது பாட்டில்களை உடைத்து வீசுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story