மலைக்கிராமங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வனத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
வனப்பகுதியை ஒட்டிய மலைக்கிராமங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வனத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும் என்று மனித-வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
வனப்பகுதியை ஒட்டிய மலைக்கிராமங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வனத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும் என்று மனித-வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் மேகமலை கோட்டம் சார்பில் வருசநாடு அருகே தும்மக்குண்டுவில் நேற்று மனித-வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வருசநாடு வனச்சரகர் சுரேஷ் தலைமை தாங்கினார். கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ், தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னக்காளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வாலிப்பாறை, காந்திகிராமம், தண்டியகுளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் மலைக்கிராம விவசாயிகளுக்கு வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புகள் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைத்து அதன்மூலம் மரம் வெட்டுதல், வேட்டையாடுதல் உள்ளிட்ட வன குற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கை
பின்னர் பொதுமக்கள் பேசுகையில், வருசநாடு, வாலிப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தார்சாலை, சிமெண்டு சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கு வனத்துறையினர் தொடர்ந்து முட்டுக்கட்டை விதித்து வருகின்றனர். இதனால் அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற வனத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு எந்தவித தடையும் இல்லை. அதே சமயம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பணிகள் மேற்கொள்வதற்கு முன்பாக வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு முறையாக அளவீடு செய்து மாவட்ட அதிகாரிகள் மூலம் வளர்ச்சி பணிகள் தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.