இருள்நீக்கி சோத்திரியம்- விஸ்வநாதபுரம் சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி சோத்திரியம்- விஸ்வநாதபுரம் சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கோட்டூர்:-
கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி சோத்திரியம்- விஸ்வநாதபுரம் சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இணைப்பு சாலை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி சாலை சோத்திரியம் முக்கம் பகுதியில் இருந்து மண்ணப் பிள்ளையார்குளம், சபாபதிபுரம் வழியாக விஸ்வநாதபுரம் வரை செல்லும் சாலை 6 கிலோ மீட்டர் தூரம் சேதம் அடைந்து காணப்படுகிறது.
இந்த சாலை மன்னார்குடி சாலையையும், திருத்துறைப்பூண்டி சாலையைும் கிராமப்பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இந்த சாலை உள்ளது.
கோட்டூர், மன்னார்குடிக்கு...
இதே சாலை வழியாக விக்கிரபாண்டியம் மேலத்தெரு, விஸ்வநாதபுரம், மேலபுழுதிக்குடி, சோமாசி, சபாபதிபுரம், மண்ண பிள்ளையார் குளம், இருள்நீக்கி, சோத்திரியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோட்டூர், மன்னார்குடிக்கு எளிதாக செல்ல முடியும்.
மேலும் இந்த பகுதியில் விளை நிலங்கள் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக உள்ளது. விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் இந்த சாலை வழியாக எடுத்து செல்லப்படுகிறது. மழை காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.