திண்டுக்கல்லில் தட்கல் டிக்கெட் எடுக்க குவிந்த மக்கள்


திண்டுக்கல்லில் தட்கல் டிக்கெட் எடுக்க குவிந்த மக்கள்
x

ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் திண்டுக்கல்லில் தட்கல் டிக்கெட் எடுக்க மக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

கோடைவிடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்தவர்கள், சொந்த ஊருக்கு குழந்தைகளுடன் செல்ல தொடங்கி இருக்கின்றனர். மேலும் பள்ளிகள் திறக்கும் வரை வெளியூர்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் விடுமுறையை கொண்டாட குழந்தைகள் உற்சாகமாக செல்கின்றனர்.

மேலும் ஒருசிலர் ஆன்மிக சுற்றுலாவாக வழிபாட்டு தலங்களுக்கும், குதூகலமாக பொழுதை கழிக்க இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களுக்கும் பயணம் செய்கின்றனர். பொதுவாக வெளியூர் பயணம் என்றாலே அனைவரின் முதல் தேர்வும் ரெயிலாக தான் உள்ளது. கழிப்பறை வசதி இருப்பதால், குடும்பத்துடன் செல்வோர் ரெயிலில் பயணிக்கவே விரும்புகின்றனர்.

முன்பதிவு டிக்கெட் தீர்ந்தது

இதையொட்டி கோடைவிடுமுறை தொடங்கும் முன்பே பெரும்பாலான மக்கள் ரெயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்து விட்டனர். இதனால் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் நிலை உள்ளது. ஆனால் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க ஒரே நேரத்தில் பலரும் முயற்சி செய்வதால், கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் குடும்பத்துடன் செல்வோர் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க விரும்புவது இல்லை. எனவே தட்கல் டிக்கெட் அல்லது சிறப்பு ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதை பார்க்க முடிகிறது.

தட்கல் டிக்கெட்

திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. இதனால் ஒரு வாரமாக தினமும் ஏராளமான மக்கள் தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்றும் ஏராளமானோர் தட்கல் டிக்கெட் எடுக்க வந்தனர்.

ஒரு சிலர் காலை 6 மணிக்கே ரெயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தனர். இதனால் தட்கல் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசை காணப்பட்டது. ஆனால் ஆன்லைனில் பலர் தட்கல் டிக்கெட் எடுத்து விடுவதால், ரெயில் நிலையத்துக்கு வந்தவர்களில் பலர் தட்கல் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் குறைந்த எண்ணிக்கையில் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் இருக்கும் ரெயில்களில் முன்பதிவு செய்து திரும்பி சென்றனர். இதற்கிடையே தட்கல் டிக்கெட் எடுக்க மக்கள் அதிகம் குவிந்து விடுவதால் முறைகேட்டில் யாராவது ஈடுபடுவார்களா? என்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story