சான்றிதழ்கள் பெற குவியும் பொதுமக்கள்


சான்றிதழ்கள் பெற குவியும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 May 2023 1:00 AM IST (Updated: 25 May 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இ-சேவை மையம்

கோத்தகிரி தாசில்தார் அலுவலக 2-வது தளத்தில் அரசு இ-சேவை மையம் உள்ளது. இங்கு பொதுமக்கள் வருமானம், இருப்பிடம், சாதி, வருமான சான்றிதழ், அனுபோக சான்று உள்பட அரசின் பல்வேறு சான்றிதழ்களை பெறவும், ஆதார் அட்டை புதிதாக எடுக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பித்து வருகின்றனர். சான்றிதழ்களை தனியார் இ-சேவை மையங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

பெரும்பாலான பொதுமக்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை விண்ணப்பித்து, சில நாட்களுக்கு பின்னர் சான்றிதழ்களை பெற்று செல்கின்றனர். இங்கு 2 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இ-சேவை மையத்தின் மற்றொரு அறையில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு புதிய ஆதார் அட்டை எடுக்கும் பணி, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. ஆதார் மையத்தில் ஒருவர் மட்டும் பணிபுரிந்து வருகிறார்.

சான்றிதழ்கள்

இந்த ஆதார் மையம் புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் செயல்படுகிறது. அங்கு நிரந்தர பணியாளர் நியமிக்கப்பட வில்லை. தற்போது கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற இ-சேவை மையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

ஆதார் மையம் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் செயல்படுவதால், திருத்தம் மேற்கொள்ள மற்றும் ஆதார் அட்டை எடுக்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அரசு இ-சேவை மையத்தில் பல்வேறு சேவைகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனியார் இ-சேவை மையங்களில் இதே சேவைகளுக்கு கட்டணம் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கூடுதல் பணியாளர்கள்

எனவே, கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி, பள்ளி தேவைக்கான சான்றிதழ்கள் பெறும் வரை கூடுதலாக பணியாளர்களை நியமிக்கவும், ஆதார் மையத்தில் நிரந்தர பணியாளரை நியமிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story