கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்


கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 26 Jun 2023 7:00 PM GMT (Updated: 27 Jun 2023 9:52 AM GMT)

அடிப்படை வசதிகள் கேட்டு தேனி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனுக்கள் கொடுக்க குவிந்தனர்

தேனி

அடிப்படை வசதிகள்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

பெருமாள்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் அடையாள அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'நாங்கள் 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென நிறுத்திவிட்டனர். அதற்கான காரணம் கேட்டபோது எந்த பதிலும் இல்லை. எங்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை. எங்கள் ஊரில் சுடுகாட்டுக்கு இடம் இல்லாததால் பிணங்களை ஓடையில் புதைக்கிறோம். எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

குடிநீர், மின்வசதி

ஆண்டிப்பட்டி தாலுகா கோத்தலூத்து கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு 47 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்த 30 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழைக்காலத்தில் ஒழுகுகின்றன. அதில் 18 வீடுகளை கட்டிக் கொடுக்க உத்தரவிடப்பட்டும் வீடுகள் கட்டப்படவில்லை. எனவே, வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் ஊரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடக்கிறது. போலீசில் புகார் கெடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

ராஜதானி அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்த ஜீவா கொடுத்த மனுவில், 'எங்கள் ஊராட்சியில் குடிநீர், மின்வசதி செய்து கொடுப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர், மின்வசதி செய்து கொடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

குடிநீர் தட்டுப்பாடு

திருமலாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'தேனி பள்ளிவாசல் தெருவில் குடியிருப்பு பகுதியில் உள்ள காலியிடத்தில் குறைவான ஆழத்தில் தோண்டி பிணம் புதைக்கப்படுகிறது. பிணத்தை நாய்கள் வெளியே இழுத்துப் போடுகின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு பிணம் புதைப்பதை நிறுத்தி அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Next Story