பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்


பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி பொருட்கள் வாங்க ஊட்டி மார்க்கெட்டில் ெபாதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,600-க்கு விற்பனை ஆனது.

நீலகிரி

ஊட்டி,

ஆயுத பூஜையையொட்டி பொருட்கள் வாங்க ஊட்டி மார்க்கெட்டில் ெபாதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,600-க்கு விற்பனை ஆனது.

ஆயுத பூஜை

நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்களிலும், வீடுகளிலும் பொதுமக்கள் பூஜை செய்வார்கள். மேலும் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள், பழங்கள் வாங்க ஊட்டி மார்க்கெட் மற்றும் சாலைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்பர் பஜார், லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்க குவிந்தனர். தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள், பழங்கள் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், பலர் ஆர்வமுடன் பூக்கள், பழங்களை வாங்கி சென்றனர். கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று ரூ.2,600-க்கு விற்கப்பட்டது. இதேபோல் முல்லை மற்றும் ஜாதிப்பூ ரூ.1,600, ஆயுத பூஜைக்கு அதிகம் விற்பனையாகும் செண்டுமல்லி ரூ.200,. அரளி ரூ.600, சம்பங்கி ரூ.500, பட்டன் ரோஸ் ரூ.400 கோழிக்கொண்டை ரூ.200, மரிக்கொழுந்து, துளசி ரூ.60-க்கு விற்பனையானது.

விற்பனை அமோகம்

இதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய், பொரி, அவல், சுண்டல், பூஜை பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடந்தது. மேலும் சுவாமிகளின் படங்கள், அலங்காரத்துக்கான வண்ண காகிதங்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர். ஒரு லிட்டர் பொரி ரூ.10-க்கு விற்பனையானது. ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும், மாதுளை ரூ.180-க்கும், ஆரஞ்ச் ரூ.80-க்கும், திராட்சை ரூ.120-க்கும், சாத்துக்குடி ரூ.70, சிவப்பு வாழைப்பழம் ரூ.70, அன்னாசி ரூ.70-க்கும் விற்பனையானது.

மேலும் கரும்பு ஒரு ஜோடி ரூ.100-க்கும், வாழை கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால், அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.

உழவர் சந்தை

ஆயுத பூஜையையொட்டி நேற்று மாலை முதல் வாகனங்களை பழுது நீக்கும் கடைகளிலும், வீடுகளிலும் சுத்தம் செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) பூஜைக்கு தயார் நிலையில் வைத்து உள்ளனர். இதேபோல் காலையில் உழவர் சந்தையிலும் பொதுமக்கள் திரளாக வந்து தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக முடங்கி இருந்த வர்த்தகம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story