பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:46 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி கடலூரில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலூர்

கடலூர்:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். மேலும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. அன்று கல்வியை தொடங்கினால், சிறப்பாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ஆயுத பூஜையை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். இதனால் முன்கூட்டியே பூசணி, அவல், பொரி, கொண்டக்கடலை, பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். அதனால் கடலூரில் உள்ள பான்பரி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் போன்றவற்றில் நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.

உழவர் சந்தை

இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் செயல்படும் தற்காலிக உழவர் சந்தையில் நேற்று பூசணி, பழம், காய்கறி, வாழைத்தார் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. சாதாரண நாட்களில் உழவர் சந்தையில் 15 முதல் 20 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகும். ஆனால் நேற்று ஆயுத பூஜைக்காக 25 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் எப்போதும் விலை அதிகரித்து காணப்படும் வாழைத்தார், வரத்து அதிகரிப்பால் நேற்று குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.

அதாவது முன்பு பண்டிகை காலங்களில் அதிகபட்சமாக ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு வாழைத்தார் நேற்று முன்தினம் ரூ.200-க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக நேற்று அதிகாலை 2 மணி முதலே அதிக அளவில் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

மக்கள் கூட்டம்

இதனால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் பகுதியில் உள்ள வாழைத்தார்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு சென்றதை காண முடிந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதிக விலைக்கு வியாபாரம் ஆகாததால், நஷ்டமடைந்தனர். இதேபோல் மளிகை கடைகளிலும் பூஜைக்குரிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.


Next Story