முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுக்க மக்கள் திரண்டனர்


முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுக்க மக்கள் திரண்டனர்
x

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக ஏராளமானோர் பலி தர்ப்பணம் நிறைவேற்றினர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக ஏராளமானோர் பலி தர்ப்பணம் நிறைவேற்றினர்.

வாவுபலி பொருட்காட்சி

குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டு தோறும் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்த ஆண்டு 97-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வருகிற 1-ந் தேதி வரை நடக்கிறது. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், பக்க காட்சிகளும் நிறைந்த இந்த பொருட்காட்சியை தினமும் ஏராளமானோர் கண்டு களித்து செல்கின்றார்கள். பொருட்காட்சியின் முக்கிய நிகழ்வாக வாவுபலி சந்தை மற்றும் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செலுத்துதல் நேற்று நடந்தது.

பலி தர்ப்பணம் நிகழ்ச்சி

ஆடி அமாவாசை தினமான நேற்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் நடத்தினார்கள். இதற்காக நேற்று அதிகாலையில் இருந்து குமரி மேற்கு மாவட்டம் மற்றும் கேரள எல்லை பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆற்றின் கரையில் குவிந்தனர்.

பலி தர்ப்பணம் நடத்துவதற்காக குழித்துறை மகாதேவர் கோவில் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் பலி செலுத்த வந்திருந்த ஆண்களையும் பெண்களையும் வரிசையாக அமர வைத்து அவர்கள் முன்பு வாழை இலைகளில் பொங்கல், பச்சரிசி, எள், பூ உள்ளிட்ட பலி தர்ப்பண பொருட்களை புரோகிதர்கள் மந்திரங்கள் உச்சரிக்க பரிமாறி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் அந்த வாழை இலைகளுடன் பலிதர்ப்பண பொருட்களை தலையில் வைத்து சுமந்தவாறு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சென்று மூழ்கி எழுந்து புனித நீராடி பலி தர்ப்பணம் நிறைவேற்றினார்கள்.

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

குழித்துறை ஆற்று தடுப்பணையின் இரு புறங்களிலும் ஏராளமானோர் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி ேநற்று காலை முதல் மதியம் வரை நடந்தது.

இந்த பலி தர்ப்பணம் நிகழ்ச்சிக்காக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மேலும் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வாவுபலி சந்தை மற்றும் பலிதர்ப்பணத்தை முன்னிட்டு ேநற்று வாவுபலி பொருட்காட்சிக்கு ஏராளமானோர் வந்தனர். இதனால் குழித்துறை, மார்த்தாண்டம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபோல், கன்னியாகுமரி கடல், திற்பரப்பு, புத்தன்அணை, மண்டைக்காடு அருகே உள்ள கூட்டுமங்கலம் கடற்கரை, திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் ஆற்றின் கரை உள்பட பல பகுதிகளில் பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.


Next Story