மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
அனுப்பர்பாளையம்
தொழில்நகரமான திருப்பூரில் வாரத்தில் 6 நாட்கள் பனியன் நிறுவனங்களில் வேலை இருப்பதால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோரும், பொதுமக்களும் கடைகள், தியேட்டர்கள் மற்றும் பூங்காக்களுக்கு வருவதுண்டு, இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய கடை வீதிகளிலும், பூங்காவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று விடுமுறையின் கடைசி நாள் என்பதால் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் காலை முதலே பொதுமக்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் வரத் தொடங்கினார்கள். மாலை நேரத்தில் மக்கள் குவிய தொடங்கினர். பூங்காவுக்குள் வாலிபர்களும், இளைஞர்களும் தனியாகவும், குழுவாகவும் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குழந்தைகளும், பெரியவர்களும் ராட்டினங்கள் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் தியேட்டர்களிலும் ஓரளவு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
----