மக்கள் கோர்ட்டு உத்தரவால் பணம் கிடைத்தது
5 ஆண்டு பிரீமியன் செலுத்தியவருக்கு மக்கள் கோர்ட்டு உத்தரவால் பணம் கிடைத்தது.
நெல்லை மாவட்டம் இடையன்குடியைச் சேர்ந்த நவமணி ரோஸ்லின் என்பவர் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இடையன்குடி கனரா வங்கி இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளர் தன்னை பாலிசி எடுக்குமாறு கூறினார். அப்போது 5 ஆண்டு முடிந்து விட்டால் மொத்த பாலிசித்தொகையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி பிரீமியம் கட்ட சொன்னார். 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் கட்டியுள்ளேன். பாலிசி முதிர்ச்சி பெற்று பணம் எடுக்க விண்ணப்பம் கொடுத்தபோது இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் பணம் வழங்காமல் அலைக்கழித்தனர். ஒரு வருடம் கழித்து வாருங்கள் என்றார்கள். ஒரு வருடம் கழித்து சென்றபோது 33 சதவீதம் பணம் தான் கொடுக்க முடியும் மீதிக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி சமீனா விசாரித்து சம்பந்தப்பட்ட கிளை மேலாளருக்கு சம்மன் அனுப்பினார். இதைத் தொடர்ந்து அந்த இன்சூரன்ஸ் நிறுவன வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி, ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 794-க்கு காசோலை வழங்கினார். அந்த காசோலையை நீதிபதி சமினா, நவமணி ரோஸ்லினிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவருடைய வங்கி கணக்கில் இந்த பணம் வரவு வைக்கப்பட்டது.