வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பொதுமக்கள்
ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக வீடுகளை காலி செய்ய சொன்ன அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக வீடுகளை காலி செய்ய சொன்ன அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
பாலம் பராமரிப்பு பணி
மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 1975-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. சுமார் 600 மீட்டர் நீளமுள்ள இந்த மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இப்பாலத்தின் கீழ் சந்தைப்பேட்டை தெருவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் மற்றும் புறம்போக்கு இடத்தில் 65 குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இவர்களின் வீடுகளை இடிக்க திட்டமிட்டுள்ளதால், அவர்களின் வீடுகளை காலி செய்யச்சொல்லி நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.
கருப்புக்கொடி
இந்த இடத்தில் தினசரி கூலி வேலைக்கு செல்லும் மக்களே பெரும்பாலும் தங்கிருப்பதால், அவர்கள் தங்களுக்கு செல்வதற்கு வேறு போக்கிடம் இல்லை எனவே அதே இடத்தில் எங்களை தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் அல்லது அரசு தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்றுமுன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறையின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி கட்டி தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.