ஏழைகள் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்


அரியலூர் பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுவதால் ஏழைகள் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

பஸ் நிலைய கட்டுமான பணிகள்

அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு ரூ.7½ கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து வாசல்களும் மரத்தடுப்புகளால் மூடப்பட்டு விட்டன. மேலும் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சார்பில் நடத்தப்படும் நகர்ப்புற ஏழைகள் தங்கும் விடுதியில் பெண்கள், ஆண்கள் உள்பட 12 பேர் தங்கி வருகின்றனர். அனைவருமே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். ஒரு சிலருக்கு கண் பார்வை குறைவாக உள்ளது. இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் உணவும் அளித்து வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தற்போது அனைத்து பாதைகளும் மூடப்பட்டு விட்டது.

வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

வயதானவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட வழியில்லை. அவர்கள் தங்கி இருக்கும் ஒரு கட்டிடத்தின் மேற்பகுதியில் சிமெண்டு பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. பஸ் நிலைய பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழா நடைபெறும் வரை அவர்கள் அங்கு தங்கியிருந்தால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

எனவே நகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடம் பஸ் நிலையத்திற்கு எதிரிலேயே உள்ளது. காலியாக உள்ள அந்த இடத்திற்கு முதியவர்களை தங்க வைத்தால் அவர்கள் மருத்துவமனை சென்று வருவதற்கும், பொதுமக்கள் உணவுகளை கொண்டு வந்து கொடுப்பதற்கும் வசதியாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story