தஞ்சை மீன்மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
தஞ்சை மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரித்து காணப்பட்டது.
தஞ்சை மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரித்து காணப்பட்டது.
இறைச்சி கடைகள்
ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவம் கண்டிப்பாக இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் இருக்கிறதோ? இல்லையோ, நகர்புறங்களில் கட்டாயம் அசைவ சாப்பாடு இருக்கும். இதனால் அன்று இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த மாதம் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் அந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியதில் இருந்து இறைச்சி விற்பனையும் அதிகரித்து வருகிறது.
மக்கள் கூட்டம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தஞ்சை வெள்ளைப்பிள்ளையர் கோவில் அருகே உள்ள மீன்மார்க்கெட், தொல்காப்பியர் சதுக்கம், பர்மாகாலனி, பட்டுக்கோட்டை பைபாஸ்சாலை ஆகிய இடங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் மீன்கள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது. தற்போது மழை பெய்து வருவதால் கடல் மீன்கள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் உள்நாட்டு வளர்ப்பு மீனான உயிர்கெண்டையின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
விலை அதிகரிப்பு
வழக்கமாக விற்பனை செய்யப்படும் மீன்கள் விலையை விட நேற்று விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் மீன்களின் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது.
தஞ்சை மீன்மார்க்கெட்டில் உயிர்க்கெண்டை (கிலோ) ரூ.200, சங்கரா ரூ.150 முதல் ரூ.200 வரையும், விரால் மீன் ரூ.350 முதல் ரூ.450 வரையும், வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், நண்டு ரூ.350, இறால் ரூ.200 முதல் ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை அதிகரிப்பு
இது குறித்து மீன் மொத்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக மீன்கள் விற்பனை குறைந்து காணப்பட்டது. ஆனால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீன்கள் விற்பனையும் அதிகமாக நடைபெற்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடல்மீன்கள் வரத்தும் குறைவாக இருந்தது. இதனால் விலை அதிகரித்து காணப்படுகிறது" என்றனர்.