ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் முதியவரின் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற மக்கள்


ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் முதியவரின் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற மக்கள்
x

குடவாசல் அருகே ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் முதியவரின் உடலை கிராம மக்கள் சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர். அப்போது 2 பேர் திடீரென நீாில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்

குடவாசல் அருகே ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் முதியவரின் உடலை கிராம மக்கள் சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர். அப்போது 2 பேர் திடீரென நீாில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீர்த்திமான் ஆறு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செருகுடி கிராமத்துக்கும், திருவீழிமிழலை கிராமத்துக்கும் இடையே கீர்த்திமான் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் பாலம் இல்லை. எனவே திருவீழிமிழலை, செம்மங்குடி, அன்னியூர், விளாகம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் எரவாஞ்சேரி சென்று அங்கிருந்து சுற்றுப்பாதையில் குடவாசல், திருவாரூர் போன்ற நகரங்களுக்கு சென்று வருகிறார்கள்.

செருகுடி அருகே அன்னியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாகசாலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்கான சுடுகாட்டுக்கு செல்வதற்கும் கீர்த்திமான் ஆற்றை மக்கள் கடக்க வேண்டி உள்ளது.

கழுத்தளவு தண்ணீரில்...

ஆற்றில் முழு அளவு தண்ணீர் சென்றால் இறந்தவர்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல கிராம மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகசாலை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்து விட்டார். கிராம மக்கள் ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் அந்த முதியவரின் உடலை சுமந்து சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேர் ஆற்று தண்ணீரில் மூழ்கினர். அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாகசாலை கிராம மக்கள் கூறியதாவது:-

பாலம் கட்ட வேண்டும்

ஆற்று தண்ணீரில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. மழைக்காலத்தில் ஆற்றில் முழு வேகத்தில் தண்ணீர் செல்லும்.

அப்போது உடலை சுமந்து செல்வது மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எனவே ஆற்றில் பாலம் கட்டித்தர வேண்டும். இந்த பாலம் மூலமாக கிராமங்கள்- நகரங்கள் இடையேயான போக்குவரத்தும் எளிதாக அமையும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.


Next Story