வீடூர் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி இறந்த வழக்கில் வீடூர் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே வீடூர் காலனியை சேர்ந்தவர் தணிகைமலை(வயது 40). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தணிகைமலை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் வீடூர் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், உயிரிழந்த தணிகைமலை குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், அலட்சியமாக செயல்பட்ட மின் ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.