சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகுத்துறை அமைக்க வேண்டும்- அமைச்சருக்கு கோரிக்கை
முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகுத்துறை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகுத்துறை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அரிதான லகூன் தீவுகள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவின் மிகப்பெரிய காடாகும். இங்கு அரிதான லகூன் தீவுகளும் உள்ளன. இதனை சுற்றிப்பார்க்க தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் அலையாத்திக்காடு பகுதிக்கு வனத்துறையின் படகு மூலம் செல்ல தற்போது எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத படகு துறைக்கு சென்று, அங்கிருந்து படகில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த படகு துறைக்கு செல்வதற்கு 5 கிலோ மீட்டர் தூரம் வாடகை காரிலோ, வாடகை ஆட்டோவிலோ செல்ல வேண்டி உள்ளது. இதன்மூலம் ஏழை, எளிய சுற்றுலா பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
குற்றங்கள்
மேலும் அந்த இடம் பாதுகாப்பு இல்லாத பகுதியாக இருப்பதால் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே முத்துப்பேட்டை ஆசாத்நகர் கோரையாறு பாலம் அருகே அனைத்து வசதிகளுடன் படகு துறை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் பொதுமக்கள், மீனவர்கள் சுற்றுலாப்பயணிகள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
முத்துப்பேட்டை ஆசாத்நகர் கோரையாறு பாலம் அருகே படகு துறை அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கும், இங்கிருந்து படகில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும் வசதியாக இருக்கும்.
இந்த பகுதி வியாபாரிகளுக்கும் வியாபாரம் பெருகும். அதனால் ஆசாத்நகர் கோரையாறு பாலம் அருகே படகுத்துறை அமைத்து தர வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.