"வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை" - நெல்லை கலெக்டர்


வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - நெல்லை கலெக்டர்
x

“நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் நெல்லை நீர்வளம், நீர்நிலைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் மூர்த்தி நயினார்குளம் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதனை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் மொத்தம் 600 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. 75-க்கும் மேற்பட்ட குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மழை பாதிப்புகளை தடுக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து தாலுகாக்களுக்கும் உதவி கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மையம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0462-2501012, 2501070 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம்.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து தகவல் தெரிவிக்க https://nellaineervalam.in/waterlogging/ என்ற சிறப்பு இணையதள வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மழை காலத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 4 ஆயிரம் முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அணைகள் மற்றும் 1,250 குளங்கள் ஆகியவற்றுக்கு நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பில் பொதுமக்கள் சிக்கினால் அவர்களை மீட்டு தங்க வைப்பதற்கு 134 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரை பகுதியிலும் 7 இடங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு டவுன், மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில் தண்ணீர் பாதிப்பு ஏற்படாமல் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் 74 பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியாக இருந்தது. இது 63 பகுதியாக குறைக்கப்பட்டு உள்ளது. கால்வாய்கள், மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் பிளாஸ்டிக், குப்பைகளை போடாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story