பழங்குடி இருளர் சமூக மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா


பழங்குடி இருளர் சமூக மக்கள்  சாலையில் அமர்ந்து தர்ணா
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி இருளர் சமூக மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி இருளர் சமூக மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடி இருளர் சமூக மக்கள் ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் எஸ்.சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த கார்னேசன் பள்ளி அருகில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இருளர் சமூக மக்கள் ஊர்வலமாக பாரம்பரிய இசை முழக்கத்துடன் சென்றனர்.

தச்சூர் கிராமத்தில் பழங்குடி இருளர் சமூக மக்களுக்கு அரசு வழங்கிய அனைத்து தொகுப்பு வீட்டையும் கட்டி கொடுக்க வேண்டும். ஆரணி கோட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடி மக்களுக்கும் நிலுவையில் உள்ள இனச்சான்று (சாதி) காலதாமதம் இல்லாமல் வழங்கிட வேண்டும்.

அனைத்து பழங்குடி மக்களுக்கும் நிலுவையில் உள்ள வீட்டுமனை பட்டாக்களை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

தர்ணா போராட்டம்

வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு சென்றிருந்ததால் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் உடனடியாக மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, ஆரணி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கா. பெருமாள் ஆகியோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், தச்சூர் கிராமத்தில் இருளர் சமூக மக்களுக்காக 89 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அப்பணி விரைந்து முடிக்கப்படும். விரைவில் மாவட்ட அமைச்சரான எ.வ.வேலு மூலமாக திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாதி சான்று, வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர்.

போராட்டத்தில் மாநில பொது செயலாளர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் ரமேஷ், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகி பி. கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story