திருச்செந்தூர் பகுதி மக்கள் வீட்டிலிருந்தே செல்போன் மூலம் இலவச சட்ட உதவிபெறலாம்:சப்-கோர்ட் நீதிபதி வஷீத்குமார் தகவல்
திருச்செந்தூர் பகுதி மக்கள் வீட்டிலிருந்தே செல்போன் மூலம் இலவச சட்ட உதவிபெறலாம் என்று சப்-கோர்ட் நீதிபதி வஷீத்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகுதி மக்கள் வீட்டிலிருந்தே செல்போன் மூலமான இலவச சட்ட உதவி பெறலாம் என்று திருச்செந்தூர் சப்-கோர்ட் நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான வஷீத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்ட உதவி மையம்
திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் வட்ட சட்டப்பணிகள் குழு மூலமாக இணைய வழி சட்ட உதவி மையம் கடந்த ஜூலை 6-ந் தேதி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவில் செல்போன் மூலம் சட்ட உதவி வழங்கி செயல்பட்டு வருகிறது.
வீட்டில் இருந்தவாறே...
மையத்தின் செல்போன் எண். 7200872588 ஆகும். இந்த எண்ணில் பொதுமக்கள் வீடு மற்றும் வசிக்கும் இடத்தில் இருந்து கொண்டே, தொடர்பு கொண்டு தங்களுக்குரிய சொத்து பிரச்சினைகள், காசோலை, திருமணம், விவாகரத்து, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு பெறுதல், கைது நடவடிக்கை, முன் ஜாமீன், குற்றவியல் நடவடிக்கைகள், உரிமையியல் நடவடிக்கைகள், மேல்முறையீடுகள் தாக்கல் செய்தல், இலவச சட்ட உதவி உள்ளிட்ட சட்ட சந்தேகங்களை வட்ட சட்டப்பணிகள் குழுவில் உள்ள இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞருடன் செல்போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனவே இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.