பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்
போடிப்பட்டி
உடுமலையில் தேரோடும் வீதிகள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்று கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் மாரியம்மன் கோவிலில் இருந்து கிளம்பும் தேர், தளி சாலை, வடக்கு குட்டை சாலை, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை சாலை வழியாக மீண்டும் நிலைக்கு வந்து சேரும்.
இதற்கென தேரோடும் வீதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். அதன்படி சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. ஆனால் தங்கம்மாள் ஓடை பகுதியில் சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறி நேற்று பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
மேலும் பாதாளசாக்கடை ஆழிறங்கும் குழியிலுள்ள மூடி கம்பிகள் தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். மாரியம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்த நிலையில் கொல்லம்பட்டறை பகுதியிலிருந்து இந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் மற்றும் உடுமலை நகராட்சித்தலைவர் மத்தீன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சித்தலைவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். உடனடியாக நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டது.