வெயிலின் தாக்கத்தால் வீட்டில் முடங்கும் மக்கள்


வெயிலின் தாக்கத்தால் வீட்டில் முடங்கும் மக்கள்
x

கரூரில் 106 டிகிரி வெயில் மக்களை வாட்டிவதைப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் தாக்கத்தால் தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கரூர்

கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரியை கடந்து 106 டிகிரி வெப்பம் வாட்டி வதைப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சோர்ந்து போகும் நிலை உள்ளது. கடுமையான வெயில் தாக்கம் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பகல் நேரங்களில் பயணத்தை தவிர்த்து மாலை நேரங்களில் பயணம் செய்து வருகிறார்கள். பகலில் கடுமையான வெப்பம் காரணமாகவும் இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாகவும் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

மேலும் சாலையில் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள குடை பிடித்தப்படியும், தலையில் துண்டு, துப்பட்டா உள்ளிட்டவற்றை போட்டபடியும் செல்வதை காண முடிந்தது. மேலும் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளை தேடிச்சென்று வாங்கி சாப்பிடுகின்றனர். இதேபோல சர்பத் கடைகள், கம்மங்கூழ், கரும்புச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கோடைகாலத்தில் இளநீர் குடிப்பதால் உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைகாலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்து வந்தால் மேற்கண்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

அமோக விற்பனை

அதேபோல் நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு மருத்துவ பயன்கள் கிடைக்கிறது. நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, கோடை காலத்தில் வரும் அம்மை மற்றும் வைரல் ஜூரம் தாக்காமல் பாதுகாக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடையும். மேலும், நுங்கிலுள்ள தண்ணீரை, உடலில் தடவினால் வியர்குரு தாக்கம் இருக்காது. மேலும் உடல் நலத்திற்கு அதிகளவில் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதில், ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.

கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது. தர்பூசணியில் இயற்கையாகவே இரும்பு சத்து நிறைந்துள்ளது. தினம்தோறும் ஒரு துண்டு தர்பூசணி சாப்பிட்டு வந்தால் நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவைகளை தேடி சென்று வாங்கி உண்பதால் அமோக விற்பனை உள்ளதாக நொய்யல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிலோ ரூ.25-க்கு...

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- நொய்யல் பகுதியில் 2 வகையான தர்பூசணி பழங்கள் உள்ளிட்ட பல்வேறு குளிர்ச்சியூட்டும் பழங்கள் விற்கப்படுகிறது. தற்போது தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிப்பால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் கடலூர், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் நொய்யல், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமோகமாக விற்பனை நடைபெறுகிறது. உடல் சூட்டை தணிப்பதற்கு நீர்ச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் அந்த வழியாக செல்வார்கள், அருகாமையில் வசிப்பவர்கள் என ஏராளமான தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

தர்பூசணி பழங்களை சில்லறையாகவும், மொத்தமாகவும், துண்டு துண்டாகவும் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது தர்பூசணி பழங்களை கிலோ கணக்கில் விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ ரூ.25 வரை விற்பனை செய்கிறோம். ஒரு துண்டு தர்பூசணி பழம் ரூ.10 வரை விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story